search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி விடுதி"

    • பள்ளி விடுதியில் இரவு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • பாதிக்கப்பட்ட மாணவர்களில் 65 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம், பகுர் மாவட்டம் ஜகாரியாவில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. பள்ளி விடுதியில் இரவு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வயிறு வலிக்கிறது என கூறி உள்ளனர். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போனது.

    உடனடியாக, பாதிக்கப்பட்ட மாணவர்களில் 65 பேர் மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் ராம்பூர்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 45 பேர் பகுரியா சுகாதார மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

    தற்போது மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவனை கொலை செய்த பின்னர் அவர் படிக்கும் பள்ளி வளாகத்தில் பிணத்தை வீசி விட்டு கண்களை எடுத்து சென்றனர்.
    • மாணவனின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஏலூர் மாவட்டம், மறுமுலாவை சேர்ந்தவர் கோகுல ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் தன்னார்வலராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ராமலட்சுமி. இவரது மகன்கள் ஹர்ஷவர்தன் ரெட்டி மற்றும் அகில்வர்தன் ரெட்டி (வயது 9).

    அலிரமூடு கூடமில் உள்ள பழங்குடியினர் நல விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் ஹர்ஷவர்தன் ரெட்டி 6-ம் வகுப்பும், அகில்வர்தன் ரெட்டி 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டுவிட்டு தங்களது அறைகளில் தூங்கினர். நள்ளிரவு மர்ம நபர்கள் அகில்வரதன் ரெட்டி அறைக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர்.

    பின்னர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தனர். அவரது 2 கண்களை கத்தியால் குத்தி பிடுங்கினர். மாணவனை கொலை செய்த பின்னர் அவர் படிக்கும் பள்ளி வளாகத்தில் பிணத்தை வீசி விட்டு கண்களை எடுத்து சென்றனர்.

    நேற்று காலை அகில்வர்தன் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட மாணவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கங்க ராஜூக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர். அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மாணவனின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவனின் கண்களை எடுக்க கொலை செய்தார்களா? அல்லது அகில்வர்தன் ரெட்டி சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசு உதவி பெரும் பள்ளியான இந்த பள்ளியில் விடுதி உள்ளது.
    • உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அரசு உதவி பெறும் பிரபல பள்ளி செயல்பட்டு வருகிறது.

    அரசு உதவி பெரும் பள்ளியான இந்த பள்ளியில் விடுதியும் உள்ளது. அங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு தங்கி இருக்கும் மாணவர் ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த சத்துமாவை தானும் சாப்பிட்டு சக மாணவர்களுக்கும் கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் சத்து மாவை சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சத்து மாவுடன் தேங்காய் எண்ணையை கலந்து மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். இந்த தேங்காய் எண்ணையில் பேன் எண்ணை கலந்திருந்ததே மயக்கத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

    வீட்டில் இருந்து சத்து மாவை வாங்கி வந்து சக மாணவர்களுக்கு கொடுத்த மாணவனின் தலையில் அதிகமாக பேன் இருந்துள்ளது. இதையடுத்து பேன் சாவதற்காக தேங்காய் எண்ணையில் பேன் எண்ணையை கலந்து பெற்றோர் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

    இது தெரியாமல் மாணவன் அந்த எண்ணையை சத்து மாவில் கலந்து சாப்பிட்டதே மாணவவர்கள் மயக்கம் அடைய காரணமாக அமைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    • ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
    • 56,020 பேர் துணைத்தேர்வு எழுத இருக்கிறார்கள்

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவில் இருந்து தற்போது வரை மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இன்று பிளஸ் 2 துணைத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்வை 56,020 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். மழை பெய்து வருவதாலும், ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், தேர்வு எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்பட மாட்டாது. திட்டமிட்டபடி இன்று தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • மாணவி சுவாதி தற்கொலை செய்வதற்கு முன்பு அதிகாலையில் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
    • பிரேத பரிசோதனை முடிவு ஒருவாரத்தில் கிடைக்கும் என பெற்றோரிடம் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

    ராசிபுரம்:

    சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர் அரசு சித்த டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களது மகள் சுவாதி (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். அதன்பின்னர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இவர் படிப்பில் முதல் மதிப்பெண் பெறும் வகையில் நன்கு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் காலையில் வகுப்புக்கு சென்று விட்ட நிலையில் மாணவி சுவாதி பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். இதையடுத்து திடீரென்று சுவாதி பள்ளி விடுதியில் 3-வது மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட சக மாணவிகள் விடுதி கண்காணிப்பாளருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், கல்வி அதிகாரி மற்றும் போலீசார் நேரில் சென்று விடுதி பொறுப்பாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பெற்றோர் சென்னையில் இருந்து விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

    மாணவி சுவாதி தற்கொலை செய்வதற்கு முன்பு அதிகாலையில் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அவர்கள் நன்றாக படிக்குமாறும், அதிக மதிப்பெண் எடுக்குமாறும் மாணவியிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் அவர், மன அழுத்தத்தில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    எனவே, தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதை தவிர வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவி சுவாதியின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனை முடிவு ஒருவாரத்தில் கிடைக்கும் என பெற்றோரிடம் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் உடலை பெற்றோர் வாங்கி சென்றனர்.

    • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
    • சென்னையில் நடந்த ஆய்வின்போது மாணவர்கள் தங்கும் விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என கண்டறிந்தனர்.

    சென்னை:

    மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த புகார் வந்தால் இந்த ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறது. அண்மையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாகவும் இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

    இந்நிலையில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி மற்றும் ஆணைய உறுப்பினர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று ஆய்வு செய்தனர். பள்ளியில் உள்ள விடுதிக்கு சென்று, விடுதி சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள் தங்கும் விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அங்கு தங்கி படித்து வரும் 50 மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலும், சென்னையில் விடுதிகளுடன் இயங்கும் 13 பள்ளிகளை ஆய்வு செய்ய உள்ளதாக கூறிய ஆணைய தலைவர், தமிழகம் முழுவதும் விடுதிகளுடன் இயங்கும் பள்ளிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படும் என்ற தகவலையும் கூறினார். தவறு செய்யும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும் ஆணைய தலைவர் சரஸ்வதி தெரிவித்தார்.

    • விடுதியில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர்.
    • விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1500-க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் 190 மாணவிகள் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் விடுதியில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர். சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து 50 மாணவிகள் திடீரென வாந்தி எடுத்து வகுப்பறையிலேயே மயக்கம் அடைந்தனர்.

    அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் மாணவிகளை ஏற்றி சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் மாணவிகளிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

    இதையடுத்து விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விடுதியில் சாப்பிட்ட மற்ற மாணவிகளின் உடல்நிலையையும் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×